search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேகதாது அணை"

    • மேகதாது அணை கட்ட முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா நினைவிட நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு உள்பட விவசாயிகள் 90 பேரை கைது செய்தனர்.

    சென்னை:

    கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு, தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நேற்று மதியம் எழும்பூர் வந்தனர்.

    பின்னர் அவர்கள் எழும்பூரில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு சென்றனர், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்காக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ரெயில் மூலமாக செல்ல முயன்றனர். இதனையறிந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இந்த நிலையில் அய்யாகண்ணு தலைமையில், விவசாயிகள் 90 பேர், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு சென்றனர். கர்நாடகா மேகதாது அணை கட்ட முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா நினைவிட நுழைவு வாயில் முன்பு அமர்ந்து இன்று காலை 7.30 மணி யளவில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு உள்பட விவசாயிகள் 90 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர்.

    • இயற்கையாக வரும் இடத்தில் அணையை கட்டுவது என்பது உகந்தது அல்ல.
    • அ.தி.மு.க ஆட்சியில் கனிம வளத்தில் சுமார் ரூ.1300 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்தினார்கள்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்டுவோம். என்பது கர்நாடகா அரசின் ஆசை, ஆனால் அவர்களுக்கு உரிமை கிடையாது. அணையை கட்டக்கூடாது என சொல்வதற்கான உரிமை நமக்கு உண்டு.

    காரணம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கபினிக்கு கீழே 80 டிஎம்சி தண்ணீர் இயற்கையாக நமக்கு வருகிறது. இயற்கையாக வரும் இடத்தில் அணையை கட்டுவது என்பது உகந்தது அல்ல.

    2-வது அவர்கள் அணையை கட்டிட முடியாது, காரணம் மத்திய நீர் மேலாண்மை வாரியம் இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்க வேண்டும், பிறகு வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும், இதற்குப் பிறகும் கட்ட வேண்டியிருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும். இப்படி பல விஷயங்கள் உள்ளது.

    அரசியலுக்காக அவர்கள் கட்டியே தீருவோம் என்பார்கள் நாங்கள் கட்ட விட மாட்டோம் என்போம். அவ்வளவுதான். அணை கட்ட முடியாது. அதனை கட்ட நாங்கள் விட மாட்டோம்.

    அ.தி.மு.க ஆட்சியில் கனிம வளத்தில் சுமார் ரூ.1300 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்தினார்கள். நாங்கள் அதை நிரப்பி தற்போது 1600 கோடி ரூபாய் லாபத்தை காட்டியிருக்கிறோம்.

    ரூ.1000 உரிமைத் தொகை யாருக்கு கிடைக்க வாய்ப்பில்லை என எழுதி கொடுக்க சொல்லுங்கள். அதை நான் கவனிக்கிறேன், எதிர்க்கட்சிகள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

    வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் குகையநல்லூர், அரும்பருதி, பொய்கை கோவிந்தம்பாடி, பரமசாத்து உள்ளிட்ட பல இடங்களில் தடுப்பணை கட்டப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேகதாது அணை கட்டப்படுமானால், காவிரிப் படுகைப் பகுதிகள் பாலைவனம் ஆகி விடும்.
    • ஒன்றிய அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக்கூடாது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநில முதல் மந்திரி சித்தராமையா நேற்று சட்டமன்றத்தில் வரவு-செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

    அப்போது அவர், மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசிடம் தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும். முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற ஒன்றிய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மைப்பணி என்றும் கூறியுள்ளார்.

    மேலும் மேகதாது அணைக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும்" என்றும் முதல் மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

    மேகதாது அணை கட்டப்படுமானால், காவிரிப் படுகைப் பகுதிகள் பாலைவனம் ஆகி விடும். எனவே ஒன்றிய அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக்கூடாது. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை விரைவுப்படுத்தி, கர்நாடகா மேகதாது அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மேகதாது அணை கட்டப்பட்டு அதில் சுமார் 70 டி.எம்.சி தண்ணீர் தடுக்கப்பட்டால் காவிரிப்படுகை பாலைவனமாக மாறுவது உறுதி.
    • உச்சநீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கர்நாடகம் கட்ட முடியாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தேவையான அனுமதிகளை விரைவாகப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நிலங்களை கையகப்படுத்துவதற்கான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்திருக்கிறார்.

    மேகதாது அணை கட்டப்பட்டு அதில் சுமார் 70 டி.எம்.சி தண்ணீர் தடுக்கப்பட்டால் காவிரிப்படுகை பாலைவனமாக மாறுவது உறுதி. தமிழ்நாட்டின் ஒப்புதலும், உச்சநீதிமன்றத்தின் அனுமதியும் இல்லாமல் மேகதாது அணையை கர்நாடகம் கட்ட முடியாது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றில் தீர்ப்பளிக்கப்படும் வரை மேகதாது அணை தொடர்பான எந்தப் பணியையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக்கூடாது என்று மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முனைப்பில் மும்முரமாக இருந்து வருகிறது.
    • காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டப்பட உள்ளது.

    கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டப்பட உள்ளது. இந்த அணை கட்டும் திட்டம் கடந்து வந்த பாதை....

    பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்காகவும், நீர் மின் உற்பத்திக்காகவும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து மழைக்காலங்களில் வெளியேறும் உபரி நீரை தேக்கி வைப்பதற்காக மேகதாதுவில் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது.

    கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசன துறை மந்திரியாக இருந்த டி.கே.சிவக்குமார் மேகதாது திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்தார். அவர், அணை அமைய உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு தெரியப்படுத்தினார். ஏற்கனவே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கும் தீராத பிரச்சினை இருந்து வரும் நிலையில் மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு ஒருபுறம் நடந்து வரும் நிலையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முனைப்பில் மும்முரமாக இருந்து வருகிறது. மேகதாது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்த கர்நாடக அரசு, மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்க கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த நிலையில், பா.ஜனதா ஆட்சி அமைத்தது. பின்னர் பா.ஜனதா அரசும் மேகதாதுவில் அணைகட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    கடந்த மார்ச் மாதம் முதல்-மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.1,000 கோடியை ஒதுக்கினார். பின்னர் பா.ஜனதா ஆட்சி கவிழ்ந்த நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்-மந்திரி சித்தராமையா மேகதாதுவில் அணைகட்ட தேவையான நிலங்களை விரைவில் கையகப்படுத்த அறிவித்துள்ளார். அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவர் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். மேலும் மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசிடம் இருந்து விரைவில் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார்.

    • முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மத்திய அரசிடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • மேகதாது அணைக்கு நிலம்கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும்.

    கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சித்தராமையாவிற்கு இது 14-வது பட்ஜெட் தாக்கல் ஆகும்.

    2023-24 நிதியாண்டில் இது இரண்டாவது பட்ஜெட். கடந்த பாஜக ஆட்சியில் தேர்தலுக்கு முன்பாக பாதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீதி பட்ஜெட்டை காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார்.

    மேகதாது அணைத்திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்த்த நிலையில், மேகதாது அணை கட்ட தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மத்திய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மை பணி என்றும் கூறியுள்ளார்.

    மேலும் மேகதாது அணைக்கு நிலம்கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

    • கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதை பொறுத்து மேகதாது அணை பிரச்சினை குறித்து இங்கு உள்ளவர்கள் பேசுகிறார்கள்.
    • முன்னாள் முதலமைச்சர் வைத்தியலிங்கம் சில குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவர் கூறுவது போல எதுவும் இல்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே அரிகேசவநல்லூரில் உள்ள அரியநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நெல்லை வந்தார்.

    அவருக்கு வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் மாநகர காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பூங்கொத்து மற்றும் புத்தகம் வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே சமூக நீதி. பல்வேறு மதங்கள் உள்ள இந்த நாட்டில் சமூக நீதி தேவை என்பதற்காகவே பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது. ஆனால் இந்த சட்டமானது ஒரு சமூகத்திற்கு எதிரான சட்டம் என சிலரால் தோற்றுவிக்கப்படுகிறது. ஒரு வீட்டில் 4 நபர்கள் இருந்தால் தனித்தனியாக அவர்களுக்கு சட்டம் இருக்க முடியாது. அதனாலேயே அனைவருக்கும் சமமான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது.

    டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். சரத் பவார் போன்றோர் கூட இந்த சட்டத்தை விமர்சனம் செய்ய வேண்டாம் என கூறியுள்ளனர். இந்த கால கட்டத்திற்கு இந்த சட்டம் அவசியமானது. எல்லோரும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ள முத்தலாக் சட்டத்தை கூட சிலர் அரசியல் ஆக்கி வருகின்றனர். ஆன்மீகம் இந்தியாவை வளர்க்கிறது. ஆன்மீகம் என்பதில் அனைத்து மதமும் அடங்கும். எல்லா மத நம்பிக்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

    கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதை பொறுத்து மேகதாது அணை பிரச்சினை குறித்து இங்கு உள்ளவர்கள் பேசுகிறார்கள்.

    எதிர்க்கட்சிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி குறித்து பேசி வரும் நிலையில் மகாராஷ்டிராவில் 40 எம்.எல்.ஏ.க்கள் வெளியேறிய சம்பவம் முற்றிலும் அரசியல் சார்ந்த கேள்வி. எனவே இது குறித்து நான் பதில் அளிக்க முடியாது.

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் என்ற பொறுப்பில் இருக்கும் எனக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளது. அதற்கு உட்பட்டு நான் செயல்படுகிறேன். முன்னாள் முதலமைச்சர் வைத்தியலிங்கம் சில குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவர் கூறுவது போல எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகிக் கொண்டே தான் இருக்கிறது என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

    முன்னதாக அவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் கோரிக்கை ஒன்றை நான் பார்த்தேன். அதில் ஒரு மதம் சார்ந்த திருவிழாவிற்கு, அதிக பஸ் மற்றும் ரெயில்களை விட வேண்டும் என்று கோரிக்கை விட்டிருந்தார். ஒருவேளை என் கண்ணில் அது மட்டும் தான் பட்டதா என்று தெரியவில்லை. இங்கு திருச்செந்தூர் உள்பட ஏராளமான வழிபாட்டு தலங்கள் உள்ளது. அவர் எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் கோரிக்கை விட்டிருந்தால் அது மகிழ்ச்சி.

    ஒருவேளை அவர் அப்படி அனைத்து மதத்தினருக்கும் சேர்த்து கோரிக்கை விடாமல் விட்டிருந்தால் ஏற்றத்தாழ்வு பாரபட்சம் இருக்கக் கூடாது. தமிழகத்தில் இந்து மதம் சார்ந்த கருத்துக்களையோ, விழாக்களையோ பேசுவதே தவறு என்ற எண்ணம் இருக்க கூடாது. முதல்வரே இந்து மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்வது கிடையாது. ஆக, இந்த பாரபட்சம் இல்லாத ஆன்மீக நிலை இருக்க வேண்டும்.

    செய்தித்தாள்களில் வந்த வேடிக்கையான செய்தியை பார்த்தேன். கஞ்சாவை இளைஞர்கள் சாப்பிட்டு பார்த்து இருக்கிறோம். இப்போது தமிழகத்தில் கஞ்சாவை எலிகள் சாப்பிட தொடங்கி இருப்பதாகவும், கஞ்சாவை தேடி போலீஸ் நிலையத்திற்கு வரும் எலிகளின் போதையை தடுப்பது எப்படி என்றும், போலீஸ் நிலையத்தில் இருக்கும் கஞ்சாவுக்கு யார் பாதுகாப்பு? எலிகளை எப்படி திருத்துவது... எலிகளின் போதையை எப்படி தடுப்பது என்ற ஒரு பெரிய பிரச்சினை தமிழகத்தில் ஓடிக்கொண்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜூன், ஜூலை மாதத்துக்கு காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறைப்படி தரவில்லை.
    • கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    கர்நாடகாவுடன் காவிரி பிரச்சினை, தென்பெண்ணை ஆறு பிரச்சினை, கேரளாவுடன் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை என தமிழகத்தின் நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வே எட்டப்படாமல் சென்று கொண்டிருக்கின்றன.

    காவிரியில் கர்நாடகம் நீர் திறப்பதை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்திருந்தாலும், மாதந்தோறும் வழங்கும் தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை.

    அது மட்டுமின்றி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை தடுக்கும் நோக்கில் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறி இருந்தார். ஆனாலும் அதற்கான நடவடிக்கைகளில் கர்நாடகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    இந்த சூழ்நிலையில் கர்நாடகா துணை முதல்-மந்திரி சிவக்குமார் அண்மையில் கூறுகையில் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கும், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கும் நேற்று முன்தினம் ஒருகடிதம் எழுதி இருந்தார்.

    அதில் ஜூன், ஜூலை மாதத்துக்கு காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறைப்படி தரவில்லை. ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி.யும், ஜூலை மாதத்திற்கு 34 டி.எம்.சி. தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். இதை தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடக அரசை அறிவுறுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகனும், கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவும் டெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து முறையிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு காவிரி ஆணைய உத்தரவுபடி காவிரியில் முறைப்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினார்கள்.

    கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். அங்கு அணை கட்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என்றும் வலியுறுத்தினார்கள்.

    இது தொடர்பான கோரிக்கை மனுவையும் மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

    • மேகதாது அணை கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது.
    • 3 மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது.

    விழுப்புரம்:

    ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி ஓமந்தூர் சார்பில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்-விழுப்புரம் ஜி.எஸ்.டி. சாலை திண்டிவனம் கோர்ட்டு வளாகத்தின் அருகே உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் திடலில் இன்று காலை 10.15 மணி முதல் 11.45 மணி வரை தனித்தனியாக 39 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

    இந்த திருமணத்தை தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

    முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையை ஸ்ரீராம் அறக்கட்டளை நிறுவனரும், பா.ஜ.க. பிரமுகரும், ஓமந்தூர் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி செயலாளருமான ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். பின்னர் 39 ஜோடி மணமகன்கள் பட்டு வேட்டி, சட்டை அணிந்து, மணமகள்கள் பட்டு புடவையுடன் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு திருமண ஜோடிகளுக்கு முன்பாக அந்தணர்கள் யாகம் நடத்தி, பிரபல தவில் வித்வான்கள் மற்றும் நாதஸ்வர வித்வான்களின் மங்கல இசையுடன் திருமணம் நடைபெற்றது.

    இந்த திருமணத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு திருமண ஜோடிகளுக்கும் 4 கிராம் தங்க திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

    இந்த திருமண ஏற்பாடுகளை ஸ்ரீராம் அறக்கட்டளை நிறுவனரும், பா.ஜ.க. பிரமுகரும், ஓமந்தூர் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி செயலாளருமான ஹரிகிருஷ்ணன் செய்திருந்தார்.

    இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேலும் கூடுதலாக 3 திருமண ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தனர். இங்கு நடந்த திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது, பொது சிவில் சட்டம் அனைவரையும் இணைப்பதற்காக வரக்கூடிய சட்டம். தண்ணீர் தர முடியாது என கூற கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களை அடமானம் வைப்பதை பாஜக ஒரு போதும் அனுமதிக்காது. மேகதாது அணை கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது. 3 மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது. காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தினால், தமிழக பாஜக துணை நிற்கும் என கூறினார்.

    திருமண நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சம்பத், பிரச்சார செயலாளர் விநாயக மூர்த்தி, தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாவட்ட தலைவர்கள், கலிவரதன், ராஜேந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி என்கின்ற ரகுராமன், புதுச்சேரி எம்.எல்.ஏ. அசோக் பாபு மற்றும் பா.ஜ.க. மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நமக்கு கடந்த ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் கொடுத்திருக்க வேண்டும்.
    • மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை சென்று உள்ளது.

    சென்னை:

    நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மாலை டெல்லி செல்ல உள்ள நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீரை திறந்துவிடவில்லை. ஆகையால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் அவர்களுக்கு வலியுறுத்த சொல்ல, டெல்லி செல்கிறேன்.

    காவிரி நீரை ஒவ்வொரு மாதம் எவ்வளவு வழங்க வேண்டுமோ அதனை கர்நாடகம் வழங்க வேண்டும் என அம்மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன். பருவமழை குறைவால் தண்ணீர் வழங்க முடியாது என கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியது பற்றி கேட்கிறீர்கள். தண்ணீர் கொடுக்க முடியாத காரணத்தை அவர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் வேண்டும் என்று நமது காரணத்தை தெரிவிக்கிறோம்.

    நமக்கு கடந்த ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 2.833 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கியது. 6.357 டி.எம்.சி தண்ணீர் நமக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசுடன் கர்நாடகா அரசு பேசினால் வரவேற்போம். ஏன் அங்கு அணைகட்டக் கூடாது என்பதை காரணத்தோடு விளக்கம் கொடுப்போம்.

    மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை சென்று உள்ளது. ஆனால் அது தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு குறித்து கேட்டபோது, அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்க மறுத்து ஆள விடுங்க... என்று பேட்டியை முடித்துக் கொண்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்டா பகுதியை சேர்ந்தவர்.
    • காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சரியான வழிகாட்டுதல்களை கூறி இருக்கிறது.

    சென்னை:

    காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருவது பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் பெங்களூரில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டால் திரும்பி வரும் போது 'கோ பேக் ஸ்டாலின்' என்று போராட்டம் நடத்துவோம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    ஜனநாயகத்தில் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அண்ணாமலை சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது.

    இந்த பிரச்சினையை வைத்து முழுக்க முழுக்க அரசியல் செய்ய நினைக்கிறார். கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் மேகதாது அணை கட்டுவோம் என்று சொல்கிறார். அதை பிடித்துக் கொண்டு அண்ணாமலை பேசுகிறார்.

    நமது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அணை கட்ட முடியாது என்பதை தெளிவாக கூறி இருக்கிறார். அதைப்பற்றி அண்ணாமலை எதுவும் பேசாதது ஏன்?

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்டா பகுதியை சேர்ந்தவர். 'மண்ணின் மைந்தர்' இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருப்பாரா? விட்டுத்தான் கொடுப்பாரா? தமிழக அரசின் முயற்சிகளை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. தவறான தகவல்களை மக்கள் மத்தியில் சொல்லக் கூடாது.

    இந்த பிரச்சினைக்கு காரணமே பா.ஜனதாதானே. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் பொம்மை முதல்-மந்திரியாக இருந்தார். அப்போது மேகதாது அணை தொடர்பான வரைவு திட்டம் ஒன்றை தயாரித்து மத்திய நீர்வ ளத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று விட்டார்கள். சட்டப்படி அந்த அனுமதி கொடுத்திருக்கக் கூடாது. ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா அரசுகள் இருந்ததால் ஒப்புதல் பெற்று விட்டார்கள்.

    அப்போது தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. வாய்மூடிமவுனமாக இருந்துவிட்டது.

    அப்போது தமிழகத்தில் பா.ஜனதா இருந்ததா என்பதே தெரியவில்லை. இந்த செயல்கள் அண்ணாமலைக்கு தெரியுமா? அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே திசை திருப்புகிறாரா?

    காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சரியான வழிகாட்டுதல்களை கூறி இருக்கிறது. அதை மீறி எந்த அரசும் செயல்பட முடியாது.

    அதற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும் என்ன சம்பந்தம்? இதற்காக 'கோ பேக்' என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? இதை பொது மக்கள் ஏற்பார்களா?

    முறையாக பார்த்தால் தவறாக சொல்லும் அண்ணாமலைதான் வெளியேற வேண்டும். அவருக்கு 'கோ பேக்' சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.பெங்களூரில் நடக்கப் போவது எதிர்க்கட்சிகள் கூட்டம். அதற்கும் இந்த பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்? அப்படிப் பார்த்தால் பா.ஜனதா காரர்கள் பெங்களூர் செல்லமாட்டார்களா?

    இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

    • ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரை வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும்.
    • தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி செல்கிறார்.

    சென்னை:

    காவிரியில் தண்ணீரை திறந்து விட உத்தரவிடுமாறு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடி காவிரியில் இருந்து கர்நாடக அரசு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும். அந்த வகையில் ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டிற்கு 34 டி.எம்.சி. அளவு தண்ணீரை திறந்து விட வேண்டும்.

    ஆனால் கர்நாடக துணை முதல்-மந்திரி சிவக்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூறும்போது, "கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இப்போது தண்ணீர் திறக்க முடியாது" என்று தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா மத்திய நீர்வளத்துறைக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை முறைப்படி இன்னும் திறந்து விடவில்லை. இதனால் ஜூன், ஜூலை மாதங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் தமிழகத்திற்கு முழுமையாக வந்து சேரவில்லை.

    எனவே கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை கணக்கிட்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தர விட வேண்டும். ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் மற்றும் ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 34 டி.எம்.சி. தண்ணீரை வழங்க உத்தரவிட வேண்டும்.ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை குறைக்காமல் வழங்கவும் கர்நாடகாவுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. இந்த நிலையில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு இப்போது தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறி இருப்பதால் இரு மாநிலங்களுக்கு இடையே மீண்டும் பிரச்சினை உருவாகி வருகிறது.

    இந்த நிலையில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருவதால் அதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளார். அவருடன் நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவும் செல்கிறார்.

    டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து பேசும்போது, "கர்நாடக அரசு உத்தேசித்து உள்ள மேகதாது அணை திட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது என்பதால் மத்திய அரசு ஒரு போதும் இதற்கு அனுமதிக்கக் கூடாது" என்று வலியுறுத்த உள்ளனர்.

    ×